சமூக நீதி மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் சமத்துவத்தைப் போன்றே மதத் தீவிரவாதமும் தலைதூக்கியுள்ள இந்த யுகத்தில் எமது வரலாற்றுப் புகழ்மிக்க வர்த்தகப் பின்னணி, உலகமயமாக்கலின் பல்வேறுபட்ட அழுத்தங்கள் மற்றும் மேற்கத்தைய நாடுகளின் பொருளாதார முறைகள், எமக்கேயுரிய சமய ஒழுக்கநெறிகள் மற்றும் பழக்கவழங்கங்கள், நிகழ்கால சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் போன்ற அனைத்து முறைகள் மற்றும் கலாசார ரீதியிலான இணக்கப்பாட்டை ஏற்று மேற்கொள்ளும் கலந்துரையாடல் என்பவற்றின் ஊடாக எமது நாடுகளை செழிப்புமிக்க நாடுகளாக மாற்றியமைக்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
கடந்த 02 ஆம் திகதி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 12 ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் ஆரம்ப அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“உலக வங்கி சுட்டிக்காட்டும் பிரகாரம் உலகில் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் கொண்டுள்ள தெற்காசியப் பிராந்தியமானது வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான பிராந்தியமாகும். இன்று இலங்கையில் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டமைக்கான காரணம், ஜனநாயகத்தை பலப்படுத்தும் நோக்கில் இணக்கப்பாட்டு அரசியல் முறையை அறிமுகப்படுத்துவதற்காகும். இந்த அரசியல் பிரவேசத்தின் ஊடாக அரசியல் ஸ்திரத்தன்மை மட்டுமன்றி நிலையான பொருளாதாரத் திட்டமொன்றை உருவாக்குவதற்கான இரு தரப்பு இணக்கப்பாடும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக பிளவுபட்டு பிரிந்து செயற்பட்ட அரசியல் பின்னணியில் இந்த புதிய பிரவேசம் காலத்தின் தேவையாக இருக்கின்றது. இந்தப் பின்னணியில் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு புதியதொரு உந்துதல் கிடைக்கின்றது.
இந்து சமுத்திரத்தின் புவியியல் ரீதியான பொருளாதார மையமாக உருவாகுவதே இலங்கையின் நீண்ட கால ஆசையாகும். இந்த எதிர்பார்ப்புக்களுடன் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான பாரிய திட்டமொன்றுடனான பாரிய பொருளாதார மறுசீரமைப்புக்களை அறிமுகம் செய்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.